“உண்ணிகழ் தன்மை புறம்பொழிந் தோங்க எண்மெய்ப் பாட்டி னியல்வது சுவையே.” என்றார் தண்டியாசிரியரும் என்க. இனி, பேராசிரியர் கருத்தின்படி தொல்காப்பியரும் புறத்து நிகழுஞ் சத்துவத்தையும் அகத்து நிகழுங் குறிப்பையும் சுவையுளடக்கி அகத்து நிகழுஞ் சுவைமெய்ப்பாட்டையே கூறினாரென்பது, அவர் பொருளுஞ் சுவையுமாகப் பகுத்துக் கூறும் மெய்ப்பாட்டுச் சிறப்புச் சூத்திரங்களாலே யறியப்படும். படவே, அகத்துக்கண் சுவையானே சுவைக்குறிப்பும் அதனாற் சத்துவமாகிய புறத்து நிகழும் மெய்ப்பாடுகளும் தோன்றும் என்பதும், புறத்து நிகழும் மெய்ப்பாட்டானே அகத்து நிகழுஞ் சுவை அறியப்படுமென்பதும் பெறப்படும். ஆகவே, ஒருவனுள்ளத்து நிகழுஞ் சுவையை அறிதற்குக் கருவி அச்சுவையாற்றோன்றும் சத்துவங்களென்பதும், அவற்றை அறிதற்குக் கருவி அறிவோனுடைய கண்ணும் செவியுமென்பதும், சுவைக்குக் காரணமாகிய சுவைக்கப்படுபொருளை யறிதற்குக் கருவி சுவைப்போனுடைய ஐம்பொறிகளென்பதும் அறிந்துகொள்ளப் படுமென்க. சத்துவங்களை அறிதற்குக் கருவி அறிவோனுடைய கண்ணும் செவியுமென்பது, “கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே.” என்று தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலினிறுதியிற் கூறுதலானும், சுவைக்கப்படு பொருளை அறிதற்குக் கருவி சுவைப்போனுடைய ஐம்பொறியென்பது தொல்காப்பியர் பொருளும் சுவையுமாகப் பகுத்துக் கூறலானும், “பொறியுணர் வொடுமொரு பொருளினை யெதிர்ந்த நெறியுடை மனத்து நிகழ்தரு பான்மை அயலவ ருறப்புறத் தாய்ப்பொரு ளெட்டின் இயல்வது சுவையென் றியம்பினர் புலவர்.” என்னும் மாறனலங்கார சூத்திரத்தானும் அறிந்துகொள்க. சுவைக்கப்படு பொருள்களை ஐம்பொறிகளாலுணர்ந்து சுவைக்குமாற்றிற் குதாரணம் வருமாறு:-- இவள் மேனி அணைபோலும்; இது பரிசத்தாலறிந்து சுவைத்தது. இக்கனி அமிழ்தம்போலும்; இது நாவாலுணர்ந்து |