அவலம் உரனெரிந்து விழவென்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த நரனிருந்து தோள்பார்க்க நானிருந்து புலம்புவதோ கரனிருந்த வனமன்றோ விவைபடவுங் கடவேனோ அரனிருந்த மலையெடுத்த வண்ணாவோ வண்ணாவோ. இதன்கண், சூர்ப்பநகைக்குத் தன்னுறுப்பை யிழத்தலாலுண்டான துன்பம் -- ஸ்தாயிபாவம். உறுப்பையிழத்தல் -- பொருள் (ஆலம்பநவிபாவம்). அற்றவுறுப்புக்களா லுண்டாகும் வருத்தமும், இரத்தஞ் சொரிதலும், பிறர்க்கு நாணலும் முதலியன -- உத்தீபநவிபாவம். உறுப்பையிழத்தலாலுண்டான மயக்கம், அரற்றுரை முதலியன--குறிப்பு (அநுபாவம்). கண்ணீர் வார்தல், அழுகைக்குரல் முதலியன--விறல் (சாத்துவிகம்). உறுப்பறுதலாலுண்டான மனக்கலக்கம், சோர்வு முதலியன -- துணை மெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). தன் உறுப்பையிழத்தலாலுண்டான அழுகை--சுவை (இரசம்) ஆகும். இளிவரல் காசொடு மணியும் பூணுங் கரியதாங் கனகம் போன்றும் தூசொடு மணியு முந்நூ றோறரு தோற்றம் போன்றும் மாசொடு கருகி மேனி வனப்பழிந் திடவூர் வந்தான் சீசியென் றாரு மெள்ளத் திகைப்பொடு பழுவஞ் சேர்ந்தான், இதன்கண் திரிசங்குவின் தோற்றத்தை (உடம்பு வேறு பாட்டை)க் கண்டு ஊரவர்களுக்கு உண்டான அருவருப்பு--ஸ்தாயிபாவம். திரிசங்குவின் தோற்றம்--பொருள் (ஆலம்பந விபாவம்). அவனணிந்திருந்த வஸ்திரம், அணி, பூணூல் முதலியவற்றின் வேறுபாடு--உத்தீபநவிபாவம். அவனுடம்பின்கண் வைத்த வெறுப்பு, மயக்கம், எள்ளலுரை முதலியன--குறிப்பு (அநுபாவம்). அருவருப்பாலுண்டான நடுக்கம், புளகம் முதலியன--சாத்துவிகபாவம். மனத்தடுமாற்றம் முதலியன--துணை மெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). இளிவரல்--சுவை (இரசம்). வியப்பு பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால் என்பிறங் கழகிற் கெல்லை யில்லையா மென்று நின்றாள் கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனி னஃதே கண்ட பெண்பிறந் தேனுக் கென்றா லென்படும் பிறருக் கென்றாள். |