x
வேற்று மரபு இது’ எனத் தக்க ஏதுக்காட்டித் தம்கோள்
நிறுவுதல் இன்னோரன்ன பல செயற்கருஞ் செயல்களால், தாம் வாழ்ந்த காலத்திலேயே,
ஈழநாட்டினர் அளித்த ‘நாவலர்’ எனும் நற்பட்டமும், மதுரைத் திருவள்ளுவர்
கழகத்தார் அளித்த ‘கணக்காயர்’ எனும் கவினுறு பட்டமும், அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தார் அளித்த ‘முனைவர்’ப் பட்டமும் பெற்ற பெருமையினர்!
தமிழ்நாட்டில் ‘இந்தி’ கட்டாயப்பாடமாக ஆக்கப்பட்டபோது, அதனை முதன்முதலில் முழு மூச்சாக எதிர்த்துப் போராடிய தீரர் இவர்! அதனால், இவர், தாம் பிறந்த எட்டயபுரத்திலேயே ‘கல்லடி’யும் வாங்கியவர்.அப்போது முதலமைச்சராயிருந்த மூதறிஞர் இராசாசி அவர்கட்குக் கட்டாய இந்தியைக் கைவிடக் கோரித் ‘திறந்த மடல்’ (An Open Letter to Hon’ble Minister C. Rajagopalachariar) ஒன்றினை எழுதித் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுப் பலர்க்கும் வழங்கியவர்! நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே சில நூல்களை வெளியிட்டுள்ளார்.அவருக்குப்பின், என் விருப்பத்திற்கேற்ப, அவர்தம் குடும்பத்தினர் அனைவருமே, “நாவலர் ச.சோ. பாரதியார் கல்வி அறப்பணிக்குழு” ஒன்றைத் தொடங்க முடிவு செய்து, என்னை அதன் செயலாளராக இருக்கப்பணித்தனர்.இவ் அறப்பணிக்குழு வாயிலாக, நாவலர் புத்தக நிலையத்தினர், நாவலர் எழுதிய நூல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுத் தமிழகம் அறியச் செய்தனர்.அதுகாறும் வெளிவராத கட்டுரைகள் பலவும் நூலாக்கம் பெற்றன.இவற்றிற்கெல்லாம் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் நாவலரின் அருமை வாழ்க்கைத் துணைவியார் திருமதி.வசுமதி அம்மாள் பாரதியும், அருமை மகனார் டாக்டர். சோ. இராசாராம் பாரதியும் ஆவர்.எனினும் உடன் ஒத்துழைப்பு நல்கியவர்கள் அவரின்நன்மக்களாம் சோ. இலட்சுமிரதன் பாரதி, கி. இலக்குமிபாரதி, திருமதி மீனாட்சி அம்மையார், டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் ஆகியோராவர்!
இத்தகைய அணுக்கத் தொடர்பின் காரணமாக, யான் ‘முனைவர்’ப்
பட்ட ஆய்வுக்கு, ‘நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்
பணி’ என்னும் தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, ஆய்வுப் பணியை முடித்து,
அதனை நூலாகவும் வெளியிட்டேன்! |