xxxvi

இதனால் இரண்டு உரைகளையும் கண்டவர்கள் வேறு வேறானவர் என்பது விளங்கும்.

மேலும், எழுத்து முதலியவற்றைக் காரணக்குறியான் வழங்குமாற்றை,

  "எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்
தசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு
தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை
தூக்கில் தொடர்ந்திசைத்தலின் தூக்கெனப் படுமே’’

என்னும் மேற்கோளால் காட்டுகின்றார் விருத்தியுரைக் காரர். இதே நூற்பாவைக் காரிகை யுரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றார். ஆனால், அம்மேற்கோள் எட்டடிகளையுடையதாய், ஏழு எட்டாம் அடிகள்,

  ‘‘பாவி நடத்தலில் பாவே; பாவொத் தினமாய் நடத்தலின் இனமெனப் படுமே’’

 என வருகின்றன.

ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் எழுதப் பெற்றிருக்குமாயின் இவ்வேறுபாடு நேர்ந்திருக்காது என்பது கருதத்தக்கது.

யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் மேற்கோளுக்குப் பயன்படுத்தும் இலக்கண ஆசிரியர்கள் மயேச்சுரர் என்பார் ஒருவர். அவரை மட்டும் மோனை எதுகை நயமுற நெஞ்சாரப் பாராட்டுகின்றார். இதனால், ‘மயோச்சுரரின் மாணவரோ, அவர் பரம்பரையினரோ விருத்தியுரை கண்டவர் ஆதல் வேண்டும்’1 என்பர்.


1.‘‘விருத்தியுரை எழுதியவர் பெருமான்பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுரருடைய மாணவரோ அவர் பரம்பரையினரோ ஆதல் வேண்டும்’’ - தென்றலிலே தேன் மொழி. (பக். 59 - 60) டாக்டர் மொ.அ. துரையரங்கனார்.