xxxvii

மயேச்சுரர் மேல் மட்டற்ற ஈடுபாடுடையவர் விருத்தியுரைகாரர் என்பது ஏற்கத்தக்கதே. அவ்வீடுபாடு, சைவ சமயத்தின்பால் மயேச்சு கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாகவோ, சிவபெருமான் பெயர் பூண்டு அவர் விளங்கியது காரணமாகவோ ஏற்பட்டிருக்கவும் கூடும். அவர் காட்டும் 1அடைமொழி அழகுகள் அவ்வாறு எண்ணுதற்கும் இடமளிக்கின்றன.

விருத்தியுரை ஆசிரியர் :

யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் கடலன்ன கல்வியாளர். அவர் செல்லாத துறையில்லை; கல்லாத கலைல்லை என்று சொல்லுமாறு விரிந்து பரந்த பேரறிவினர். பாயிரம் உட்பட 232 அடிகளே (நூற்பா அகவல் அடிகள்) கொண்டது யாப்பருங்கலம். அதற்கு அவர் கண்டுள்ள உரைவிரிவுப் பரப்பை அச்சிட்ட நூற்பக்கங்களைப் பார்க்கவே புலப்படும். மூன்றே நூற்பாக்களைக் கொண்டது ஒழிபியல். அதில் இரண்டாம் நூற்பா (95) 7 அடிகளைக் கொண்டது. அதற்கு உரை விளக்கம் 393 ஆம் பக்க முதல் 619 பக்க முடிய விரிந்து செல்லுகின்றது. இவ்வொன்றே உரையாசிரியரின் புலமைத் திறத்தைப் பறையறைந்து சொல்ல வல்லதாம்.

உரையிடையே அகத்தியம், அகநானூறு, அஞ்சனம், அடிநூல், அணிநூல், அமிர்தபதி, அவிநயம், அறிவுடை நம்பி சிந்தம், ஆதிநாதர் ஆய்ந்த நூல், இடைக்காடர் ஊசிமுறி, இரணமா மஞ்சடை, இராமாயணம், இறையனார் களவியல், இன்மணியாரம், இன்னிலை, உதயணன் கதை, எழுகூற்றிருக்கை, ஐங்குறுநூறு, ஒளவையார் பாடல், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம், கணக்கியல், கண்ணனார் கவி, கபிலர் பாடல், கருடநூல், கருநாடகச் சந்தம் (குணகாங்கியம்), கலித்தொகை, கலியாண கதை, கல்லாடர் பாடல்,


1. பிறை நெடுமுடிக் கறைமிடற் றரனார் பெயர்மகிழ்ந்த பேராசிரியர். நீர்மலிந்த வார்சடையோன் பேர்மகிழ்ந்த பேராசிரியர். வாம மேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர். உயரும் பரம் நகரச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். திரிபுர மெரித்த விரிசடை நிருத்தர் பேர்மகிழ்ந்த பேராசிரியர். பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். கமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர். திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளின் திருப்பெயர்மகிழ்ந்த தொன்னூற் கவிஞர்.