முகவுரை
  நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

- சகல கலாவல்லிமாலை

தமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று
வகையாகக் கொண்டார். யாப்பு அணி என்பவை தொல்காப்பியப் பொருளதிகாரத்துள்
முறையே செய்யுளியல், உவமவியல் என்பவற்றுள் அடங்கும். பிற்காலத்தார்
இலக்கணங்களை வடநூல் முறையைப் பின்பற்றி ஐந்தாகக் கொண்டனர். தொல்காப்பியர்
காலத்தும் அவருக்குப் பின்னரும் யாப்பைப் பற்றிய நூல்கள் பல தமிழில் இருந்தன.
அவை நூற்பாவிலோ வெண்பாவிலோ ஆக்கப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியை
நோக்குங்கால் அவ்வுரை எழுந்த காலத்துக்கு முன்னரே யாப்பிலக்கண நூல்கள் பல
பலவாகப் பல்கியிருந்தமை புலனாகும். யாப்பருங்கலமும் காரிகையும் தோன்றிய பின்னர்
அவை யெல்லாம் வழக்கொழிந்து அழிந்து போயிருக்கவேண்டும். அவற்றுள்
தொல்காப்பியச் செய்யுளியல் ஒன்றே எஞ்சி நிற்கிறது. பிற்காலத்தில்
யாப்பிலக்கணத்தைக் கற்க விழைந்தாரும் செய்யுளியலைப் பயிலாது யாப்பருங்கலக்
காரிகையையே பயில்வாராயினார். யாப்புலகில் காரிகைக்கு அத்துணைச் சிறப்பு இன்றும்
உள்ளது.

யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியராகிய அமிர்தசாகரனார் யாப்பிலக்கணம்
ஒன்றை இயற்றக் கருதி யாப்பருங்கலம் என்ற நூலை எழுதினார். யாப்பின் பரப்பைக்
கடலெனக் கொண்டு அக் கடலைக் கடத்தற்குத் தம் நூல் ஒரு கலம் போல்வதெனக்
கருதி அதற்கு அவர் யாப்பருங்கலம் என்ற பெயரை * வழங்கினார்.


* இப்பெயருக்கு வேறு காரணம் கூறுவாறுமுளர்.