நூலாசிரியர் வரலாறு

யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியர் அமிர்தசாகரர் என்பது, இந்நூல் யாவராற்
செய்யப்பட்டதோ வெனின் .... .... அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும்
ஆசிரியராற் செய்யப்பட்டது’ (பக். 3) என்பதனாற் றெரிகின்றது. அமிர்தசாகரர் என்ற
பெயர் அமுதசாகரர் என்றும் சுவடிகளிற் காணப்படுகின்றது. யாப்பருங்கல விருத்தியின்
பாயிரத்துள் இவர் பெயர் ‘அளப்பருங் கடற் பெயர் அருந்தவத்தோன்’ என்று குறிக்கப்
பெற்றுள்ளது* அளத்தற்கு அரிய கடலினது பெயர் எனவே, அஃது அமிதசாகரர் என்று
இருத்தல்வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால் இந்நூலின் பரிசோதனைக்கு
எடுத்துக்கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ,
அமுதசாகரர் என்றோ காணப்படுகின்றதே ஒழிய, ஒன்றிலும் அமிதசாகரர் என்ற பெயர்
இல்லை. கிடைத்த யாப்பருங்கல ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர்
இல்லை. வீரசோழிய உரையிலும் இப்பெயர் அமுதசாகரனார் என்றே
எடுத்தாளப்படுகிறது.
 

ஆசிரியர் இந்நூலுள் தெய்வ வணக்கமாக அருகதேவரை வணங்குவதாலும்
சமணமதத் தொடர்புள்ள செய்யுட்களை உதாரண இலக்கியமாகக் காட்டுவதனாலும் இவர்
அம்மதத்தைச் சேர்ந்தவர் என்பது விளங்கும். ‘தனக்கு வரம்பாகிய தவத்தொடு
புணர்ந்த அருந்தவத்தோன்’ ‘அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர்’ ‘மாமுனி’
என்று இவர் வழங்கப்படுவதைக்கொண்டு இவர் துறவி என்பது புலனாகும்.
 


  * ‘முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்
செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப்
பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி
யாப்பருங் கலநனி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி
அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே’
என்பது பாயிரம்.