உரையாசிரியர் வரலாறு

யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர் குணசாகரர் என்பது பரம்பரையாக
வரும் கேள்வியாலும், காரிகைச் சுவடிகளின்மேல் வரையப் பெற்றிருக்கும் குறிப்பினாலும்
தெரிகிறது. யாப்பருங்கலத்துக்கு உரைகண்டாரும் இவரே. இரண்டு நூல்களின்
உரைகளிலும் உரையாசிரியர் எடுத்தாளும் இலக்கண மேற்கோட் சூத்திரங்களும்,
உதாரண இலக்கியங்களும் ஒற்றுமை யுடையனவாக இருத்தலினாலும் உரை நடையும்
பல விடங்களில் ஒன்றாகக் காணப்படுவதனாலும் இது விளங்குகின்றது. இவ்விரண்டு
உரைகளுள் யாப்பருங்கல உரை முதலிற் றோன்றியிருத்தல் வேண்டு மென்பது,
‘யாப்பருங்கல விருத்தியுட் காண்க’ (பக். 67, 115, 160, 195) என்ற தொடரால் அறியக்
கிடக்கின்றது.

தம் காலத்தில் வழங்கிவந்த யாப்பிலக்கண நூல்கள் பல வற்றிலிருந்து
இவ்வாசிரியர் மேற்கோள் காட்டுவதனால் அந்நூல் களில் இவருக்கிருந்த பயிற்சி
புலனாகின்றது. பண்டையாசிரியரையும் நூல்களையும் இவர் பாராட்டும் இயல்பினர்.
சங்கச் சான்றோர் செய்யுட்களிலிருந்தும் சங்க காலத்துக்குப் பின் தோன்றிய
சீவகசிந்தாமணி, சூளாமணி போன்ற நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டுவதிலிருந்து
அந்நூல்களில் இவருக்கிருந்த புலமையும் தெரிகிறது. மேற்கோளை இலக்கியங்களி
லிருந்து எடுத்தாளும்போது, பெரும்பாலும் நூற்பெயரையோ, ஆசிரியரின் பெயரையோ
இவர் குறிப்பிடுவதில்லை. இலக்கணச் சூத்திரங்களை மேற்கோள் காட்டும்பொழுது
அவை இன்ன நூலின என்றோ இன்னோர் வாக்கு என்றோ தெளிவாகக் கூறுவர்.
இன்ன நூலினவை என்று தெரியாதவற்றைக் கூறும்போது. ‘என்றார் ஆகலின்’ என்று
வாளா கூறுவர். காரிகையைச் சூத்திரமென்றும் சூத்திரக் காரிகை என்றும் குறிப்பர்.

குணசாகரரும் அமிர்தசாகரரும் ஒரு காலத்தவர் என்ற சிலர் கருதுகிறார்கள்.
இக்கருத்துக்கு யாப்பருங்கலத்துள்ளும் காரிகை யுள்ளும் ஆதாரம் எதுவும் இல்லை.

      இவர் உரை பிற்காலத்தில் பிரதி செய்தவர்களால் கூட்டியும் குறைத்தும், புதிய
உதாரணங்கள் சேர்க்கப் பெற்றும் சில மாறுதல்களை அடைந்திருப்பது முகவுரையில்
கூறப்பட்டுள்ளது.