(11) கைக்கிளைத்திணையாவது: - ஒரு மருங்கு பற்றிய கேண்மை; இஃது ஆண்பாற்கூற்று பெண்பாற்கூற்று என்னும் இரண்டு பகுப்புக்களையும் காட்சி முதலிய பத்தொன்பது துறைகளையுமுடையது. பிரம முதலிய எண்வகை மணத்தினுள்ளே ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்னும் இம்மூன்றும் இதற்குரியனவென்பர் தொல்காப்பியர். (12) பெருந்திணையாவது: - பொருந்தாக்காமம்; இஃது ஆண்பாற் கூற்று, இருபாற் பெருந்திணையென்னும் இரண்டு பகுப்புக்களையும் செலவழுங்கல் முதலிய முப்பத்தாறு துறைகளையும் உடையது. கைக்கிளையும் அகனைந்திணையுமாகிய ஆறு திணைகளும் பிரம முதலிய எண்வகை மணத்தினுள்ளே ஆசுரம் இராக்கதம் பைசாசம் காந்தருவமென்னும் நான்கு மணங்களைப்பெறத் தான் ஒன்றுமே பிரமம் பிராசாபத்தியம் ஆரிடம் தெய்வமென்னும் நான்கு மணம்பெற்று நடத்தலான், எல்லாவற்றினும் பெரிதாகிய திணையென்று பொருட்காரணங்கூறுவர் நச்சினார்க்கினியர். இத்திணையிற் கூறப்படும் செய்திகளிற் சிலவற்றிற்கும் நற்காமத்துக்குரிய செய்திகளிற் சிலவற்றிற்கும் உள்ள வேறுபாடு நுணுகி ஆராய்ந்து அறிதற்குரியது. ஒழிபு: - பாடாண் பகுதியிலும் வாகையிலும் கூறப்படாதொழிந்த புறத்துறைகளை யுணர்த்துவது; கொடுப்போரேத்திக்கொடா அர்ப்பழித்தலென்னும் துறை முதலிய பதினெட்டுத் துறைகளையுடையது. மேற்கூறிய பன்னிரண்டு திணைகளுள் வெட்சி முதல் தும்பையீறாகவுள்ள ஏழும் புறமென்றும், வாகை பாடாண் பொதுவிய லென்னும் மூன்றும் புறப்புறமென்றும், கைக்கிளை பெருந்திணையென்னுமிரண்டும் அகப்புறமென்றும் கூறப்படும். இந்நூலிலுள்ள 19 - ஆம் சூத்திரத்தினாலும், "உழிஞையுநொச்சியுந் தம்முண் மாறே" (பன்னிரு.) என்பது முதலியவற்றாலும் உழிஞைப் படலத்திற்குப்பின் நிற்றற்குரியதாக அறியப்படும் நொச்சிப்படலம் எல்லாப் பிரதிகளிலும் அதற்கு முன்பே காணப்பட்டமையால் அவ்வாறே பதிப்பிக்கப்பட்டது. "வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்" என்னும் பழைய செய்யுளிலும், 'இவ்வாறன்றி இவற்றினிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும் இறுதியில் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை என்பவற்றையுங் கூட்டிப் பன்னிரு படலமாக்கி அவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்பது, இருபத்திரண்டு, ஒன் |