பொருது வெல்வர். பிறகு தாம் கைக்கொண்ட நிரையை அரிய வழியிடத்தும் காட்டிடத்தும் 1வருந்தாமற் செலுத்திச் செல்வர். அவர்களது வரவைச் சேய்மைக் கண்ணே கண்ட அவர்களுடைய இனத்தினர் மகிழ்வர். வெட்சியார் தாம் கொணர்ந்த நிரையை ஊர் மன்றங்களில் நிறுத்தி அப்பால் அவற்றை வீரர்களுடைய தகுதிக்கு ஏற்பப் பகுத்து அளித்து மதுவை உண்டு மனங்களித்து ஆடிமகிழ்வர். அவ்வீரர்கள் பின்னும் கிணைப்பறை கொட்டும் பொருநன், பாணன், விறலி, கள்விற்பவள் என்பவர்களுக்கு மதுவை வழங்குவார்கள். பகைப்புலத்து நிலைமையை அறிந்து வந்தவர்களுக்கும் கரிக்குருவியின் சொல்லாகிய நிமித்தத்தை அறிந்து சொன்னவர்களுக்கும் தம்மினும் மிக்க பங்கைக் கொடுத்துப் பழங்கால முதற்கொண்டே பரம்பரையாகத் துடிகொட்டி வருபவனுக்குச் சிறப்புச்செய்து வெற்றி தந்ததன் பொருட்டுத் துர்க்கா தேவியை வழிபடுவர். அவ்வீரர்களின் மனைவியராகிய மறத்தியர் வள்ளிநாயகியின் வேடம்புனைந்து முருகபூசை பண்ணும் வேலனோடு 2வெறியாட்டு ஆடி மகிழ்வர். 2. கரந்தைப்படலம் வெட்சியார் நிரை கொள்ளவந்த காலத்தில் நிரைக்குரிய அரசருடைய படைஞர் 3கரந்தைப் பூவையேனும் அதனாலாகிய மாலையையேனும் அணிந்து நிரையை மீட்டுவரல் மரபு. அப்பொழுது நிகழ்வன வருமாறு: பகைவர் தம் நாட்டின் பசுநிரையைக் கொண்டு சென்றதை அரசனிட்ட கட்டளைப்படி அறையப்படும் பறையினால் வீரர்கள் அறிந்தவுடன் அவர்கள் தாம் தாம் செய்துகொண்டிருந்த தொழிலை இருந்த நிலையிலேயே நிறுத்திவிட்டுக் கரந்தையைச் சூடி வீரக்கழலினைப் புனைந்துகொண்டு வில்லையேந்திக் கூட்டமாகக்கூடி நிரையைக் கைக்கொண்ட பகைவர் சென்ற வழியிற் பெருமுழக்கத்தோடு சென்று அவரைக்கண்டு சூழ்ந்து போர்புரிந்து 4நிரையை மீட்டுவருவர். அவ்வீரருட் சிலர் முகத்திலும் மார்பிலும் பட்ட 5 புண்களுடன் வருவர். சிலர் தம்புகழை நிலைநிறுத்திவிட்டுப் போரிலே பட்டு வீழ்வர். 1. ஆனிரைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற வெட்சியாரது எண்ணம் இதனாலும் புலப்படுகிறது. 2. இது வள்ளிக்கூத்தெனவும் சொல்லப்படும் ; வள்ளிக்கூத்து இழிந்தோராற் காணப்படுவதென்பர் நச்சினார்க்கினியர். 3. கரந்தை - கொட்டைக்கரந்தையென்னும் பூடு. 4. இச்செயல் , துரியோதனாதியர் கைக்கொண்டு சென்ற விராட நகரத்து ஆனிரையை அருச்சுனன் பொருது மீட்டுவந்த செய்தியோடு ஒப்பிடுதற்குரியது. 5. இவை விழுப்புண்ணெனப்படும். |