முகப்பு தொடக்கம்

பொருளமைப்பு

1. வெட்சிப்படலம்

ஓர் அரசன் தன்னுடைய பகையரசனோடு போர் செய்ய எண்ணி அப்பகைவனது நாட்டில் வாழும் அந்தணர் முதலியோரையும் பசு முதலியவற்றையும் அந்நாட்டினின்றும் அகற்றல் வேண்டி, 1'நாம் போர் செய்யப்போகின்றோமாதலின் ஆவும், ஆவினது இயல்புடைய அந்தணரும், மகளிரும், நோயுடையீரும், நுமது குடியில் இறந்தோர்க்குச் செய்தற்குரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும் பிள்ளைகளைப் பெறாதீரும் நுமக்குப் பாதுகாப்பாகிய இடங்களைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று பறையறைவிப்பான்; அங்ஙனம் பறையறைவதை உணரமாட்டாத பசுக்களைக் கைக்கொண்டு வந்து பாதுகாக்கக் கருதித், 2தன் வீரர்களை ஏவுவான். அதன் பின் நிகழும் நிகழ்ச்சிகள் வருமாறு :-

அரசனது கட்டளையைப் பெற்ற வீரர்கள் துடியை முழக்கி 3வெட்சிப் பூவையேனும் அதன் மாலையையேனும் சூடித் தாம் மேற்கொண்ட காரியம் வெற்றிதருமா வென்பதை உணர 4நற்சொல்லைக்கேட்டுப் பின்னர்ப் பகைவர்களுடைய பசுக்களுள்ளஇடத்தை நோக்கிச் செல்வார்கள். செல்லுகையில் இடையே ஒற்றர்கள் பகைப்புலத்தில் பசுக்கள் நின்ற இடம், அவற்றின்தொகை, அவற்றைக் காத்து நின்ற வீரர்களின் நிலையென்பவற்றை இருளிற் சென்று அறிந்து வந்து கூறுவர். உடனே,வெட்சியார் பகைப்புலத்தாரின் நிரை நின்றுள்ள குறுங்காட்டின்வாயில்களைச் சுற்றி வளைந்து காவலாளர்களைக் கொன்று அங்குள்ள நிரைகளைக் கைக்கொண்டு எதிர்த்த பகைஞர்களோடு


1. புறநா. 6.

2. அரசனால் ஏவப்படாமல் வீரர்கள் தாமே சென்று நிரை கவர்ந்து வருதலும் உண்டு ; அது தன்னுறு தொழிலெனப்படும்.

3. வீரர்கள் அவ்வத்திணைக்குரிய பூவையேனும் அதன் மாலையையேனும் சூடுவதன்றிப் பொன்னாற் செய்த அந்தப் பூவையும் அணிவார்கள் . இது போர்க்களத்தில் வேறுபாடறியும் பொருட்டு மேற்கொண்ட வழக்கமென்று தோற்றுகின்றது.

4. இது விரிச்சி பார்த்தலெனப்படும் ; இக்காலத்து அசரீரி வாக்கென்று வழங்கப்படுவது இதுவே.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்