பகைமேற் சென்றகாலத்தில் அரசன் பாசறையை அமைத்து அதில் படைகளுடன் தங்குவான். போர்செய்யுங் காலத்தில் மேல் எதிர்த்து வந்த சேனையை ஒரு வீரன் தனியே நின்று பெருவெள்ளத்தைத் தடுக்கும் அணையைப்போலக் காப்பதும் உண்டு. வீரர் தமக்குத் தோற்றுப் புறங்காட்டுபவர்மேல் ஆயுதப் பிரயோகம் செய்யார். பகையரசர் திறைகொடுத்துப் பணிந்து பகைமை நீங்கிய பின்னரும் சிலகாலம் அரசன் பாசறையில் இருத்தல் உண்டு. சில அரசர் முதன் முறை தீயிட்ட பின்னரும் தம்மைப் பணியாத பகைவர்களது நாட்டில் மீட்டும் தீயிடுவர். 1படைவீரர்களுக்குப் போர்க்களத்திலேயே பெறும்படி உணவைத் தருதல் அரசர் வழக்கம். பகைவரது நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று தங்கிய பின்பும் அரசர்கள் சினம் தணியாமல் இருத்தல் உண்டு. அக்காலத்துப் பகைவர் நாடு அழிதலையெண்ணிச் சிலர் இரங்குவர். 4. காஞ்சிப்படலம் தன் நாட்டின்மேற் பகையரசன்படையெடுத்து வந்த காலத்தில் ஓரரசன் தன்படைவீரர்களோடு காஞ்சிப்பூ அல்லது அதன் மாலையைச்சூடி எதிரெழுந்து செல்வான்; அப்பொழுது நிகழ்வனவருமாறு: பகைவேந்தன் தன் நாட்டின் புறத்தே படைகளுடன் தங்கியிருத்தலை யறிந்த ஓர் அரசன் துடியைக் கொட்டுவித்து வீரர்களைத் திரட்டிக்கொண்டு எழுந்து பகைவர் படை தன் நாட்டெல்லையுட் புகாதபடி வழிகளைப் பாதுகாத்து நிற்பான். வீரர்களில் சிறந்தவர்களுக்கு அரசன் ஆயுதங்களை வழங்குவான். அவற்றைப் பெற்ற வீரர் மகிழ்ந்து தத்தம் ஆற்றலைத் தோற்றுவிப்பர். பகையரசன் அறைகூவியபின் காஞ்சியை அணிந்த மன்னன் தன் வாளையும் குடையையும் நல்லவேளையில் முன்பு செல்லவிட்டு, 2"இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குமுன் பகைவர்களை வெல்லேனாயின் பகைவருக்கு முன் பணிந்து நடப்பவனாவேன்" என்பன போன்ற சபதமொழிகளைக் கூறுவான். அவனாற் கொடுக்கப்பட்ட காஞ்சிப்பூவாகிய அடையாளத்தை வீரர் சூடுவர். 1. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனென்னும் அரசன் பாரதப்போரில் பாண்டவர் துரியோதனாதியரென்னும் இரு வகையாருடைய சேனைக்கும் உணவளித்தானென்னும் வரலாறு இங்கே கருதற்குரியது; புறநா. 2. 2. அருச்சுனன், 'சயத்திரதனை இன்று சூர்யாஸ்தமனத்திற்குள் கொல்வேன் ; அங்ஙனம் கொல்லேனாயின் எரிபுகுவேன்' என்று சபதஞ் செய்ததாகப் பாரதத்தில் உள்ள வரலாறு இங்கே நினைவுக்கு வருகிறது. |