பகைவர்களை எதிர்த்தகாலத்தில் பட்ட வீரனுடைய தலையைச் சிலர் சிறப்பிப்பர்; அத்தலையைக்கொண்டு வருபவர்களுக்கு அரசன் பரிசில் வழங்குவான். அங்ஙனம் கொணரப்பட்ட தலையைக் கண்டவுடன் அத்தலைக்குரிய வீரனுடைய மனைவி உயிர்நீப்பாள். அரசன் பொரும்பொழுது, பகைவருடைய வன்மையைத் தாங்காத வீரர் சிலர் அவரால் இறந்துபடுதலை விரும்பாமல் தம்மேற்பட்ட புண்ணைத் தாமே கிழித்துக்கொண்டு உயிர்விடுவர். வேலினாற்பட்டு விழுந்த வீரரைப் பேய் காத்து நிற்றலும், சிலரைப் பேய்கள் அச்சுறுத்துதலும், வீழ்ந்த வீரனது புண்ணை அவை தொடுதலும், தொடாமல் அஞ்சிநிற்றலும் உண்டு. பொருதுபட்டவர்களுடைய இயல்புகளைப் பாராட்டிக் கூறிப் பிறர் வருந்துவர். வீரர்களுக்கு அரசன் கள்ளைக் கொடுத்துமகிழச் செய்வான். போரிற் பட்ட வீரர்களுடைய மனைவியர் தீக்குளிப்பர்; அன்றித் தம் கணவர் பட்ட வேலினாலே குத்திக் கொண்டு தாமும் இறந்துபடுவர். 'நின் மகளை மணஞ் செய்துகொடு' என்றுகூறி இணங்காததை அறிந்து எதிர்த்த அரசனுடன் பொருதலும் தம்நாட்டின்மேற் படையெடுத்து வந்தாரைத் துரத்துதலும் காஞ்சித் திணையினருக்குரிய வேறு செயல்கள். 5. நொச்சிப்படலம் பகையரசர் தன்னுடைய மதிலின் புறத்தேவந்து முற்றுகை செய்த காலத்தில் அரசன் நொச்சிப் பூவையேனும் மாலையையேனும் சூடித் தன் மதிலைக் காத்து நிற்பான். அக்காலத்தில் நிகழ்வன வருமாறு :- நொச்சிப் படையினர் மதிலை முற்றிய படையை எதிர்த்துக் காக்கும்பொழுது வீரர் சிலர் பட்டு வீரசுவர்க்கம் புகுவர். வீரர் தம்முடைய காவற்காடும் அகழியும் சிதையாமல் மேல்வந்த பகைவரது சேனையோடு பொருது வெற்றி கொள்வர். அக்காலத்திற் வீரர் சிலர் இறந்துபடுவர். பகைவரால் விடப்பட்ட குதிரை மதிலினுக்குள் தாவிக் கொண்டு வரும். மதிலில் நின்று போர்புரியும் வீரர் சிலர் பட, அவர்களுடைய உடலின் பகுதிகள் மதிலுக்குப் புறத்திலும் அகத்திலும் சிதறி விழும். பகைவருடைய போருக்கு அஞ்சி மீண்டு ஒரு சாரார் வர, வேறு சிலர் அச் செயலுக்குச் சினந்து மதிலைக் காப்பர். மதிலில் உள்ள வீரர்மகளைப் புறத்துள்ள பகைவர் விரும்பி வேண்ட அதற்கு இணங்காமல் வீரம் பேசுதல் 1அவ்வீரர் இயல்பு. 1. கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய மறமென்பது இச்செய்தியைச் சார்ந்ததே. |