முகவுரை

தமிழ் நெறிவிளக்கமென்பது தமிழினது ஒழுகலாற்றை விளக்கும் விளக்குப்போன்ற நூலென்னும் பொருளுடையது. இஃது அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கமென்னும் இலக்கண நூற்பெயர்களையும் உண்மை விளக்கம் நீதிநெறிவிளக்கமென்னும் இலக்கிய நூற்பெயர்களையும் போன்றது. தமிழென்றது பல பகுதியாகிய தமிழ் நூற்பரப்பை. நெறியென்றது புலனெறி வழக்கினை. அலங்காரத்தில் நெறியென்பது செய்யுளின் நடையைக் குறித்து நிற்றல் காண்க. இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயம்புவது மரபாதலின் நல்லிசைப் புலவரும் பிறரும் இலக்கியங்களில் அமைத்துக் காட்டியவற்றையும் ஆராய்ந்து அவர்களுடைய தமிழ்நூல்களின் நெறி இத்தகையதென்பதை விளக்குவது இந்நூல். 

இறையனாரகப் பொருளுரையாசிரியர் அந்நூல் நுதலியது இன்னதெனக்
கூறுமிடத்து,

‘இந்நூல் என்னுதலிற்றோ வெனின் தமிழ்நுதலிய தென்பது’ என்றும்,
பிறிதோரிடத்தில் 
 

  ‘தமிழ்தான் நான்குவகைப்படும், எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்புமென’
 
என்றும் அமைக்கின்றார். இவ்விடங்களில் தமிழென்பதற்கு அவர்  தமிழிலக்கணமென்ற பொருள் கொண்டாரென்று தோற்றுதலின் தமிழ் இலக்கண நெறியை விளக்குவதென்னும் பொருளும் இந்நூற்பெயருக்குப் பொருத்தமுடையதாகும்.
 


 

‘தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய

களவெனப்படுவது கந்தருவ மணமே’ (யா. வி. சூ. 93 மேற்:)
என்னும் அவிநயச் சூத்திரமும்  
  “தமிழ்நெறி வழக்க மன்ன தனிச்சிலை வழக்கு” (களங்காண்-61)
 
 
 

என்னும் கம்பர் வாக்கும் தமிழ் இலக்கண வழக்கைச் சிறப்பிக்கின்றன.
‘தமிழியல் வழக்கம்’ ‘தமிழ்நெறி வழக்கம்’ என்ற தொடர் மொழிகளுக்கும்
இந்நூற்பெயருக்கும் பொருளொப்புமை யிருத்தல் காண்க.