இளவேட்டனார்

33. பாலை
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,
கல்லுடைப் படுவில் கலுழி தந்து,
5
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என
10
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி,
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.- இளவேட்டனார்

157. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
5
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்,
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
10
நுண் பல் தித்தி மாஅயோளே.

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்