மிளைகிழான் நல்வேட்டனார்

210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
5
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்

349. நெய்தல்
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
5
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
10
என் என நினையும்கொல், பரதவர் மகளே?

தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்