அமர்க் கண் ஆமான்

165. குறிஞ்சி
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.