அரவுக் கிளர்ந்தன்ன

366. பாலை
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
5
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
10
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்