ஆள் இல் பெண்டிர்

353. குறிஞ்சி
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
5
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
10
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்