இஃது எவன்கொல்லோ

273. குறிஞ்சி
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
5
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
10
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்