இரும்பின் அன்ன

249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
5
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
10
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்