இலை மாண் பகழிச்

352. பாலை
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
5
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
10
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள்
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்