உள்ளார் கொல்லோ....கொடுஞ்சிறைப்

241. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
5
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
10
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்