வம்ப மாக்கள்

298. பாலை
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
5
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
10
ஒருமை செப்பிய அருமை, வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே?

தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்