வரி அணி பந்தும்

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
5
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
10
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்