வரையா நயவினர்

329. பாலை
வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
5
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி-தோழி!-உதுக் காண்:
10
இரு விசும்பு அதிர மின்னி,
கருவி மா மழை கடல் முகந்தனவே!

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்