விளிவு இல் அரவமொடு

257. குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்-
5
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட!-நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
10
நடு நாள் வருதி; நோகோ யானே.

தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்