விறல் சால் விளங்கு

208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-
5
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
10
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை,
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்