வினை அமை பாவையின்

362. பாலை
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
5
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
10
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!

உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்