வேர் பிணி வெதிரத்துக்

62. பாலை
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
5
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
10
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே?

முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்