கழை பாடு இரங்க

95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
5
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
10
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.

தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்