சிறு வீ ஞாழல்

191. நெய்தல்
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
5
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
10
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்