செல விரைவுற்ற

308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
5
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
10
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்