துய்த் தலைப் புனிற்றுக்

206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்
5
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!-
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்?
10
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்