தொடி பழி மறைத்தலின்

23. குறிஞ்சி
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,
5
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்