நல் நுதல் பசப்பினும்

151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
5
வாரற்கதில்ல-தோழி!-கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
10
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்