நீ உணர்ந்தனையே

91. நெய்தல்
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
5
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
10
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்