நீர் வளர் ஆம்பல்

6. குறிஞ்சி
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
10
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்