நெடுந் தண் ஆரத்து

292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
5
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்-ஐய!-மை கூர் பனியே!

இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்