நொச்சி மா அரும்பு

267. நெய்தல்
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
5
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்-
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
10
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்,
'இவை மகன்' என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.

தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்