பெரும் புனம்

368. குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
5
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே-
10
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே!

தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்