மணி துணிந்தன்ன

159. நெய்தல்
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
5
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,
10
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்