மலை அயற் கலித்த

108. குறிஞ்சி
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
5
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.