காயா

242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
5
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
10
தேடூஉ நின்ற இரலை ஏறே.

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

371. முல்லை
காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
5
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்:
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்-
தழங்கு குரல் உருமின் கங்குலானே.

வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்