மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

189. பாலை
இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

உரை

வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்.

360. குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.

உரை

தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்