நெறி இருங் கதுப்பொடு

190. முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?

உரை

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன்.