பா அடி உரல பகுவாய்

89. மருதம்
பா அடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.

உரை

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர்