பாடினோர் முதலியவர்களின் வரலாறு

8. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையார் : - புலத்துறை முற்றிய கூடலூர்
கிழாரைக்கொண்டு இந்நூலைத் தொகுப்பித்தோராகிய இவர் சேரநாட்டரசர்; சேர பரம்பரையிற்
பிறந்தவர் மகாவீரர்; பெருவண்மையை யுடையவர்; செங்கோலினர்; யானையினது பார்வை
போலும் பார்வையையுடையவர்; கொல்லி மலைக்குத் தலைவர்; விளங்கிலென்னும் ஊருக்குப்
பகைவரால் வந்த துன்பத்தைத் தீர்த்தவர்; கபிலருடைய நண்பர்; கடற்கரையிலுள்ள
தொண்டியென்னும் நகரத்தை ஆண்டவர்; ஒரு காலத்துப் பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து அவனாற் பிணிப்புண்டிருந்து வலிதிற்போய்ச்
சிங்காதனத்திலேறிக் குறுங்கோழியூர் கிழாராற் புகழ்ந்து பாடப் பெற்றார். சோழன் இராயசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி
யோடு போர் செய்தவர்; இவர் பெயர் கோச்சேரமான் யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேரலிரும் பொறையெனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்
பொறையெனவும், சேரன் மாந்தரஞ்சேரலிரும் பொறை யெனவும், மாந்தரஞ்சேரலிரும்
பொறையெனவும், மாந்தரம் பொறையெனவும் தொகை நூல்களில் வழங்குகின்றது. சேரமான்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை யென்பதனை ஒட்டுப் பெயரென்பர் (இ, வி. 38)

பரிமேலழகர் 355-ஆம் திருக்குறளின் விசேடவுரையில் இவர் பெயரை மேற்கோளாக
எடுத்துக்காட்டிப் பொருள் எழுதி விளக்கியிருக்கிறார். சேர பரம்பரையில் மாந்தரனென்று ஓர்
அரசன் மிக்க புகழ் பெற்றவனாக இருந்தானென்று பதிற்றுப்பத்தால் தெரிகிறது. இவருடைய
பெயர்த்தலையில், ‘கோச்சேரமான்’ என்ற அடைமொழி காணப்படாமையின், இவர் இந்நூலைத்
தொகுப்பிக்குங் காலத்தில் இளவரசராக இருந்தாரென்றும் தொகுப்பித்த பின்பே முடிபுனையப்
பெற்றாரென்றும் தெரிகின்றன. கோவென்பது பண்டைக்காலத்தில் முடிபுனைந்த பின்பு
குடிப்பெயரோடு கொடுக்கப்படும் பட்டப்பெயர்; கோச்சேரன், கோச்சோழன், கோப்பாண்டியன்
என்பவற்றாலுணர்க. இவரிறந்த பின்பு பிரிவாற்றாது வருந்திப் புலம்பிய கூடலூர் கிழாருடைய
“ஆடியலழற்குட்டம்” (புறநா. 229) என்னும் செய்யுள் இவருடைய அருமைக்குண
விசேடங்களை நன்கு புலப்படுத்தும்; இவரைப் பாடிய புலவர்கள் குறுங்கோழியூர் கிழார்,
பொருந்திலிளங்கீரனார், கூடலூர் கிழார்;
இவர்களுள் இவரிறந்த பின்பும் இருந்தவர்
கூடலூர் கிழார்.