3. மருதனிள நாகனார். இக் கலித்தொகையுள் மூன்றாம் பகுதியாகிய மருதக்கலி 35 பாடல்களையும் பாடியவர் மருதனிளநாகனா ரென்பவர். ‘மருதனிள நாகன் மருதம்’ என்பதும் காண்க. இவரது இயற்பெயர் நாகனென்பது நாகனென்னும் பெயரைப்பூண்ட தமிழ்ப்புலவர் பலர். அவர்களுள், பல புலவர்கள் பெயரினீற்றில் உயர்வுப் பொருளைக் காட்டும் ‘ஆர்’ என்னும் இடைச்சொல், சேர்ந்து ‘நாகனார்’ என்றே வழங்கும். அவர்களுள் இன்னவரைக் குறிக்கிறாரென்று கேட்பவர் உணருவதற்காகச் சொல்லுபவர் அப்பெயரின் முன் தாம் குறிக்கும் அப்புலவரது ஊர், தொழில், நிறம், குணம், சிறப்பு, அவர் பாடிய பொருள், அவரது பருவம், அவர் தந்தையார் பெயர் முதலியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ சேர்த்துக் கூறுவாராயினர். இது வெள்ளைக்குடி நாகனார், விரிச்சியூர், நன்னாகனார், மதுரைப் பொன் செய்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், பொன்னாகன், அம்மெய்யனாகனார், நன்னாகனார், நந்நாகனார், புறத்திணை நன்னாகனார், இளநாகனார், கண்ணனாகனார், மதுரைப் பூச னிளநாகனார், மதுரைக் கடையத்தர் மகன் வெண்ணாகன், மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார், இனிசந்த நாகனார், என்பவை முதலியவற்றால் அறியலாகும். இளநாகனாரென்று மற்றும் சில புலவர் இருந்தமையின் தகப்பனார் பெயரை முதலிற்சேர்த்து இவரை 1மருத னிளநாகனாரென்று வழங்குவா ராயினர். இப்புலவர் மருதனென்பவர் புதல்வரெனின் மருதனென்றது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பாராட்டப் பெற்றவரும் மதுரைக்காஞ்சி நூலாசிரியருமான மாங்குடி மருத னென்பவரையோ மற்றொருவரையோ என்ற ஐயம் நிகழலாமன்றோ! அதனின் நீக்குதற்கு இவர் தந்தையாருக்கு மதுரை என்று அடைகொடுத்து அவரை
1 பாலை பாடுதற்குப் பெருங்கடுங்கோவும் குறிஞ்சி பாடுதற்குக் கபிலரும் போல, மருதம் பாடுதற்கு இளநாகனார் சிறந்தவரென்று கொண்டு, மருதனென்பது மருதத்திணையைப் பாடுதலிற் சிறந்தவ னென்னும் பொருட்டாய் இளநாகனையே சுட்டி இருபெயரொட்டாய் நிற்கிறதென்று கருதுவாரும் உளர்.
|