26 ஆசிரியர்கள் வரலாறு


இவர் சோழர்குடியிற் றோன்றியவரே யானாலும் இவர் அரசுரிமை பெற்றிருந்தாரென்று துணிய இயலவில்லை. இவர் பாடல்களைப் பொதுவாக நோக்காது கூர்ந்துநோக்கின் அவற்றுட் சில, இவர் அரசுரிமை பெற்றிருந்த சோழன் முதலியவரால் துன்புறுத்தப்பட்டு அவர் பால் வெறுப்பும் பாண்டியனால் இன்புறுத்தப்பட்டு அவன் பால் விருப்புமுடையவரா யிருந்தாரென்ற உணர்ச்சியை உண்டாக்கும்படி இருக்கின்றன.

"விளைபதச் சீரிட நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி யுள்ளதம்
வளன்வலி யுறுக்கு முளமி லாளரொடு
இயைந்த கேண்மை யில்லா கியரோ
கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென
அன்றவ ணுண்ணா தாகி வழிநாட்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைக லுளவா கியரோ.’’

என்னும் புறநானூற்றுச் (190) செய்யுள் குறிக்கும் பொருளையும்,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’’.

என்னும் இந்நூற் செய்யுட்பகுதி கூறும்பொருளையும் சேர்த்து உய்த்துணர்பவர்க்கே இச்செய்தி புலனாம். இவ்வூகத்திற்குக் காரணம் சோழன் முதலியவரிடத்து வெறுப்புத் தோன்றாவிடின் பாண்டியனைப் புகழுதற்குப் பல செய்திக ளிருப்பவும் சோழசேரர் நிலத்தை அவன் கைப்பற்றினானென்று இயன்மொழி கூறுதல் இன்றியமையாததன் றென்பது முதலியவை.

பாண்டிநாடு, வன்புலக் காட்டு நாட்டை மிகவுடையதாயிருந்தமையின் இவர் அங்கே பழகி முல்லைவளங்களை நன்கறிந்தார்.

இவர் முல்லைக்கருப்பொருளைக் கூறுமிடத்து ஆயர், துவராடை யுடுப்பவரென்றும் காயாம்பூங் கண்ணியையும் பல மலர்களாலாகிய கண்ணியையும் சூடுபவரென்றும் பசுவினத்தையும் ஆட்டினத்தையும் மிக்குடையவரென்றும் அதனை மேய்த்தற்கு அந்நிரை முன் கோலைஊன்றி